ஒரு நாள் "மேட்டுபாளையம் - கோவை" செல்லும் பேருந்தில் ஏறினேன். கோவையில் வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்ல பேருந்தில் அமர இடம் இல்லாமல் ஒரு தூண் போன்ற கம்பியை அனைத்தவாறு நின்றேன். பேருந்து காரமடையை நெருங்கும் போது, கூட்ட நெரிசல் அதிகரித்தது. நான் நின்று கொண்டு இருந்த இடமருகில் இருக்கையில் அமர்த்திருந்த இளம்பெண்கள் அவர்கள் வயதுக்குரிய பொலிவு, சிரிப்பு, பேச்சு என்று தங்கள் பயணத்தை ரசித்துகொண்டபடி இருந்தனர். ஓட்டுனர் வேகத்தடை மிதியை ஒரு முறைக்கு இரு முறை வேகமாய் உதைக்க, நின்றிருந்த அனைவரும் முன்னுக்கும் பின்னுக்கும் நடனம் ஆடியவாறு அசைந்தனர்.
என் நடனத்தை கண்ட அந்த பெண்கள், "தம்பி என் மடில உக்காந்துக்கோ" என்று ஒரு பரிவோடு கூற. "இல்ல பரவால" என்று நான் சொல்லி முடிக்கும் முன், என் கைகளை பிடித்தார் ஒருவர். நானும் ஒருவர் மடியில் அமர்ந்தேன். அதன் பின்னர், இருவரும் தங்கள் கல்லூரி பாடம், கல்லூரி அனுபவங்களை பற்றி பேசியவாறு இடையில் என் கன்னத்தை கில்லுவது, கால் வலிக்கும் போது, இன்னொருவர் மடியில் மாற்றிவிடுவது என்று மணித்துளிகள் ஓடின.
காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடைய சற்று நேரம் இருக்கும் பொழுது, இரு பெண்களும் தங்கள் பாட தலைப்பு ஒன்றை பற்றி விவாதம் செய்து கொண்டுருந்தனர். அந்த பேச்சில் இருந்து அவர்கள் பள்ளி முடித்து கல்லூரியில் சற்றே சேர்ந்து உள்ளனர் என்பது திண்ணம். அவர்கள் வாதத்தின் இடையில் நான் "அக்கா அது நீங்க சொல்லற மாரி இல்ல, அது இப்படி" என்று என் கருத்தை நான் கூற. " 6th std ல இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்" னு ஒரு பெண் என்னை வினாவ. நானோ "ஐயோ அக்கா, நான் 10th முடிச்சுட்டு வழிகாட்டி நிகழ்ச்சிக்கு போறேன்" என்று பதிலுரைத்தேன்.
"முதல நீ என் மடில இருந்து எந்திரி ?!?!?!?
குறிப்பு : இது உண்மை சம்பவம்