Showing posts with label Loganathan. Show all posts
Showing posts with label Loganathan. Show all posts

Wednesday, December 28, 2011

ஊட்டி !

ஊட்டி !

இயற்கை அன்னையின்
இதமான இன்னிசை ..,
குயில் பாடலாய் ஒலிக்கும்
குளிர் காற்று ..,
அரும்பும் தளிர் போல
பனிப்பூகள் பச்சை புல்லில் ..,
இதழ் விரித்து பாடும்
மலை மகளின் மணி மகுடமாய்
தோகை கொண்டு ஆடுகிறது
மேக கூட்டம்..,
வெயில் வெறும்
வெளிச்சமாய் மட்டும்..,

குளிரின் கரம் தொட்டதால்
கன்னிப்பூ வெடித்து
நிலம் நோக்கும் மலர் செண்டு ..,
"மீண்டும் ஒரு முறை தொட்டுப்பார் "
கேலி செய்கிறது
சில்லென்ற நீர் !!!
"சுவாசம்" -
மூச்சுக்காற்றாய் நிறைத்தது
நுரையீரல் மட்டுமா !
இல்லை
இதய அறைக்குள்ளும்
இன்ப வருடல்கள் !!!
இத்தனை நாள் .. நான்
காணாத காவியம் !!!
இயற்கை தீட்டிய
ஆழகு ஓவியம் ..,
அதிகாலை வெண்பனியில்
"மதி"பெருகி
அலை மகளாய்
மலை முகட்டை அணைக்கிறாள்
"அருவி "- யாய்
இரவுக்காட்சியில்
நிசப்தத்தின் இறைச்சல்மேல்
நித்திரை கொள்கிறேன் !!!
இறைவனின் படைப்பில்
இத்தனை அழகா !!!
இல்லை
இல்லவே இல்லை !!!
நட்பின் கருவறையில்
கைகோர்க்கும் போது
காணும் அத்தனையும்
"ஆழகு" தான் ..,
மீண்டும் நாங்கள்
"குழந்தைகளாய்"

 - லோகநாதன் 




இயற்கையில் ஓர் இனிய பயணம்


அலுவலக உலகத்தை
சற்று மறந்துவிட்டு
இயற்கை அன்னையின்
மடியில்
துயில் கொள்ள
சென்றோம்,
ஒரே குடும்பமாய் !
விருந்தோம்பல்
பண்பினை
எங்கே கற்று கொண்டன . இந்த செடிகள் ?
எல்லா செடிகளும்
தலை பணிந்து
இலைகளை அசைத்து
சிறு புன்னகையுடன் 

வரவேற்க !
வரவேற்பாளர்களாய் ,
வழி நெடுக
வானுயர்ந்த  மரங்கள் !
தாயின் தாலாட்டாய்
பறவைகளின் இனிய
சப்தம்
எல்லா திசைகளிலும் !
தென்றல் காற்று ,
தேகம் தழுவ
சுவாச அறை வரை
சென்று திரும்பியது ;
தூய்மையான புத்துணர்வுட்டும் ஆக்ஸிஜன் !
உலகிற்கு ஒளி தரும்
கதிரவனுக்கே கடுங்குளிரோ ?
மேக மெத்தைக்குள்
பனி போர்வைக்குள்
அப்படியோர் உறக்கம் !
மனதிற்கு  மகிழ்வாய் ,
கண்ணிற்கு குளிர்ச்சியாய்,
திரும்பும் திசையெங்கும்
வண்ண மலர்கள் !
மலர்களை தேடி ,
வண்ணத்துப் பூச்சிகளின் ஊர்வலம்!
நிலவு மகளுக்கோ
புது  விருந்தாளிகளான
நம்மை கண்ட
ஆனந்தமோ ?
இரவு முழுவதும் ,
பனி மழை பொழிய
கடுங்குளிரிலும் நெருப்பு மூட்டி ,
இதமான வெப்பத்துடன்
ஆட்டம் பாட்டமாய்
களிப்புடன் நிறைவடைந்தது
அன்றைய இரவு !
பலவித விளையாட்டுகளுடன்
மழலைகளாய் மாறினோமே!
இறுதியாய்,
மலைகளின் ராணியிடமிருந்து 
பிரியா விடை பெற்று கொண்டு
இரு நாட்களின் இனிய நினைவுகளை ,
இதய ஆல்பத்தில் அழியா புகைப்படமாய் பதித்து கொண்டு
மீண்டும் திரும்பினோம் ,
எங்கள்
இயல்பு வாழ்விற்கு !



 - பானு

Friday, December 9, 2011

கனவு !



எதிர்காலம்..,
நிகழ்காலம் நிஜமானவர்களின்
ஏழாம் அறிவின்  எழுச்சி!!!

" அ...ஆ.. இ.."
பாடம் படிக்கிறேன்... நான் !!!!
கண்களில் ஏக்கம்
கனவுகளின் துரத்தல்
சலனமில்லா ஒரு இரைச்சல்
கையில் உலகம்
உணர்வுகளின் நெருக்கடி  
வாழ்க்கையின் எழுதுகோல்
இசையின்   அரவணைப்பு
சுவாசத்திலும் சுகம்
தாயின் முதல் முத்தம்
தவிப்புகளின் தாரக மந்திரம்
......................................,
" தம்பி  சீக்கிரம் கிளம்பு
வேலைக்கு time  ஆயிடுச்சு "ஆச்சர்யத்தில் கண் விழித்தேன்
அம்மாவின் அழகிய அறிவிப்பு !!!
கண்களின் பிம்பத்தில் 
(என்) ஓலைக்குடிசையின் உயிரோட்டம்....

ஆம்..........
"கல்வி"
எனக்கு ஓர் பகல் கனவு ....
எட்டாத ஓர் உணர்வு....

இருளின் நாடகத்தில்
நினைவுகளும் கவிஞனாக்கிவிட்டது
"கல்வி" எனும் எழுதுகோல் கையில் ...,

" இதோ வந்துட்டேன் அம்மா !!!"
அனிச்சைசெயலாய் அத்தனையும்..,

இரவுகளுக்காக காத்திருக்கிறேன்
இன்று
அடுத்த பக்கத்தில் "அப்துல் கலாம்"..,

கானல் நீராய் என் "கல்வி"
மூளையின் முதுகெலும்பில்
முளைத்திட்ட ஓர் விதை !!!

என்ன செய்ய
படிக்கும் வயதில்
நான்
பால் வியாபாரி !!!
நடக்கிறேன்
வழக்கமான பயணம்

கனக்கிறது..,
கையில் ஏற்றிய பாரமல்ல
நினைவுக்கூட்டில்
என் கனவுப் புத்தகங்கள் !!!

"வருகிறேன் அம்மா"
வாடகை இல்லாதது
கரு(அ)வறை மட்டும்தானோ !!!
ஆழ்ந்த யோசனையில்
இன்றைய நாள்...

கை கொடுக்க வேண்டாம்
'கல்வி' கொடுங்கள் ...,
சாலையில் சந்தித்த மக்களிடம்
என் மனம் கேட்ட யாசகம் !!!

நிஜமாக்குமா !!! நிஜமாகுமா !!!
என்  "கனவு"


" அம்மா பால் ............................... "

- லோகநாதன்


 மரங்கள் நிறைந்த காடு !
மழைக்குபஞ்சமில்லா ஞாலம் !
மனித நேயமுள்ள மனம் !
சிசுக்கொலை இல்லா கிராமம்!
மதுபானக் கடை இல்லா தெருக்கள் !
குழந்தை தொழிலாளர் இல்ல சமூகம்!
விபத்தில்லா சாலைகள் !
வீதியெங்கும் மரங்கள் !
குப்பையில்லா வீதிகள் !
அனைவருக்கும் கல்வி !
சாதிகள் இல்லா சமூகம் !
யாசகர்கள் இல்லா கோயில்கள் !
புகையில்லா வாகனம் !
தூய்மையான காற்று !
வன்முறை இல்லா உலகம் !
லஞ்சமில்லா வாழ்கை !
அனாதைகளே இல்லா அகிலம் !
கடனில்லா இந்தியா!
சிட்டுக்  குருவிகளின் சப்தம் !
இவை எல்லாம் ,
        இனி  கனவில் மட்டும் தானா ?
         நிஜமாகுமா ?
         மாற்றம் தேடியே ,
                                         ஓர்  பயணம் !!!

- பானு