Showing posts with label Banu. Show all posts
Showing posts with label Banu. Show all posts

Wednesday, October 3, 2012

அழகிய கனா!

"அன்பாய் நீ!
ஆதரவாய் அப்பா!
இறைவனின் ஆசியுடன்
இன்பமான வாழ்வு!"
உன் கருவறையில் நான் கண்ட அழகிய கனா!!
ஆனால் அது கனவாக மட்டுமே
இருந்துவிடும் என்பதறியாது
வந்தேனம்மா இந்த உலகிற்கு!

தாய்ப்பால் இல்லாமல்
புட்டிப்பால் கொடுத்ததாக பாட்டி சொன்னாங்க,
கள்ளிப்பால் கொடுத்திருக்கலாமோ?
என்று கன்னி மனம் நினைத்ததம்மா!

ஆராரோ கேட்டதில்லை,
பகிர்ந்து கொள்ள பந்தமில்லை,
சோறு ஊட்ட ஆளுமில்லை,
அன்னை மடி உறங்கவில்லை!

சோர்வுற்ற வேளைகளிலும்,
சோகம் எனை சூழ்கையிலும்,
என் தலை சாய,உன் தோள்களும்
விழி நீர் துடைக்க,உன் விரல்களும்
இங்கு இல்லையம்மா!

பட்டம் படித்து,பரிசு பல வாங்கையிலே
"என் மகள்" என்று
கண்ணில் நீர் மல்க,
எனை கட்டி அணைத்து ,உச்சி நுகர
நீ இங்கு இல்லை அம்மா!

சொல்ல வந்த வேதனைகளும்,
தேக்கி வைத்த துன்பங்களும் ,
தொண்டை குழியில் உருளுதம்மா!

துன்பப்பட்டு,துன்பப்பட்டு,
துயரங்கள் கூட
துவண்டுவிட்டன!

விழி நீர் ஒவ்வொன்றும்,
வைரங்களாகும் வரம் மட்டும் எனக்கு கிடைத்திருந்தால்,
உன் மகளும் இருந்திருப்பாள் அம்மா
உலக செல்வந்தர்களில் ஒருவராய்!

நீ இல்லாது
கடந்து வந்த என் வாழ்க்கை பயணம்,
எனக்கு கற்று தந்தவை,
வலிகளையும்,வேதனைகளையும் மட்டுமல்ல
கொஞ்சம் வலி தாங்கும் சக்தியையும்,
தேயும் நிலவிடம் ,"வருந்தாதே! வளர்பிறை வரும்" என்றும்
காயும் நிலத்திடம், "கலங்காதே!கார்மேகம் கண் திறக்கும்" என்றும்
ஆறுதல் சொல்லும் வலிமையையும் தான்  அம்மா!

சாமிகிட்ட நீ போக,
சித்தியுடன் அப்பா போக,
அழுவதை தவிர அப்பருவத்தில், வேறேதும் அறியா
மங்கையிவள் என் செய்வாளம்மா?

நான் இழந்த அத்தனையையும்,
மொத்தமாக திருப்பி தர,
பாவி மனம் ஏங்குதம்மா..
"என் மகளாய் நீ பிறப்பாய்" எனும் கலையாத கனவோடு!!!!

-பானு

Friday, March 2, 2012

"நம்மால் முடியும்" என்ற நம்பிக்கையோடு!


பத்து மாதம் பத்திரமாய் இருந்து,
பெற்றவளை விட்டு பூமிக்கு வந்தோம்!
வாழ்க்கைப் பயணத்தில்,
இறங்(க்)கும் நேரம் தெரியாமலே!

வாழ்க்கைத் தேடலில்,
வழியில் அறிமுகமாகும்,
பலரிடமிருந்தும் கேட்கும் ஓர் வாசகம், "என்ன வாழ்க்கையடா இது?"

இன்ப துன்பம் நிறைந்தது தான் இவ்வுலக வாழ்க்கை!

இலையுதிர் காலத்தை ஏற்கும் சோலைகள், அதை இழப்பாக நினைப்பதில்லை!
வசந்த காலம் வந்த போதும், அதை வரவேற்க மறப்பதில்லை!

நம் வாழ்வின் மேன்மை,தெரிய வேண்டுமா?
வாழ்வின் அர்த்தம் அறிய வேண்டுமா?
வாழ்வின்  மதிப்பு புரிய வேண்டுமா?

 கேட்டுப் பாருங்கள்!

விளக்கை நோக்கிச் சென்று,
வினாடிப் பொழுதில் உயிர் தப்பிய
விட்டில் பூச்சிகளை!

வேடன் தானெறிந்த அம்பினிலே
தப்பிப் பிழைத்த தத்தைகளை!

அண்டை நாட்டு அணுகுண்டிலிருந்து
அதிசயமாய் தப்பித்த
சில அதிர்ஷ்டக்காரர்களை!

எதிர்பாரா விபத்தில்,
எப்படியோ உயிர் பிழைத்த
எண்ணற்ற மாந்தர்களை!

"பூர்வ ஜென்மத்து புண்ணியமோ?
இறைவனின் இரக்கமோ? தப்பிப் பிழைத்தது"
என்று அவர்கள் சொன்னது, காற்றினிலே கலந்து,என் காதுகளை அடைந்தது!

உங்கள் இறுதி ஆக்ஸிஜனை,
 நீங்கள் சுவாசிக்கும் வரையிலும் ரசியுங்கள்!

பகலவனைக் கண்டதும்
பட்டென மறையும்
பனித்துளியை!

கணநேரப் பொழுதாயினும்,
காண்போரைக் கவரும்,
கதிரவனின் நிறப்பிரிகையாம் வானவில்லை!

நடுநிசி ஆயினும்,
நட்சத்திர தோழிகளிடம்
கதை அளாவும் நிலவினை!

ஆலமரத்து கிளைகளில்,
அங்குமிங்கும் ஓடித்திரியும்
அணில்களை!

பார்ப்போரை பரவசப்படுத்தும்
பச்சிளங்குழந்தைகளின்
பவளச் சிரிப்பை!

சட சடவென்று
பெய்யும் மழையில்,
ஜன்னலோரப் பேருந்து பயணத்தை!

இன்னும்,
ஏராளமாய்
உங்களுக்குப் பிடித்தவற்றை,
மிகவும் பிடித்தவற்றை ரசிக்கப் பழகுங்கள்!

நமக்கு வயதானாலும்,
அவற்றிற்கு "என்றும் இளமை" தான்!

உங்கள் இதயத்துடிப்பு நிற்கும்
இறுதி நொடிப்பொழுது வரையிலும் நேசியுங்கள்!

இன்ப துன்பம் எதுவாயினும்
இனிதாய் நம்மை வழிநடத்தும் இறைவனை!

அன்பென்ற வார்த்தை தவிர
அவளேதும் அறியா
அருமை அன்னையை!

கண்டிப்புடன்
கடும் உழைப்பையும்
நமக்காகத் தரும் தந்தையை!

நம் மௌனத்தின் அர்த்தம் கூட,
அழகாய்ப் புரிந்து கொள்ளும்
அன்பான நண்பர்களை!

செல்லமாய்த் சண்டையிடும்
சகோதர உறவுகளை!

போட்டியிடும் பகைவனை!

இவர்களுக்கெல்லாம் மேலாக,
மிகவும் முக்கியமாக,
இன்னுமொருவரை நேசியுங்கள்!

இவ்வுலகில்
வேறு யாராலும் நேசிக்க முடியாதபடி, "உங்களை" மிகவும் நேசியுங்கள்!

வாழ்வின் மதிப்பு தானாய்த் தெரியும்!

நாளை உலகைக் காண,
நடைபோடுவோம்,"நம்மால் முடியும்" என்ற நம்பிக்கையோடு!

Wednesday, December 28, 2011

ஊட்டி !

ஊட்டி !

இயற்கை அன்னையின்
இதமான இன்னிசை ..,
குயில் பாடலாய் ஒலிக்கும்
குளிர் காற்று ..,
அரும்பும் தளிர் போல
பனிப்பூகள் பச்சை புல்லில் ..,
இதழ் விரித்து பாடும்
மலை மகளின் மணி மகுடமாய்
தோகை கொண்டு ஆடுகிறது
மேக கூட்டம்..,
வெயில் வெறும்
வெளிச்சமாய் மட்டும்..,

குளிரின் கரம் தொட்டதால்
கன்னிப்பூ வெடித்து
நிலம் நோக்கும் மலர் செண்டு ..,
"மீண்டும் ஒரு முறை தொட்டுப்பார் "
கேலி செய்கிறது
சில்லென்ற நீர் !!!
"சுவாசம்" -
மூச்சுக்காற்றாய் நிறைத்தது
நுரையீரல் மட்டுமா !
இல்லை
இதய அறைக்குள்ளும்
இன்ப வருடல்கள் !!!
இத்தனை நாள் .. நான்
காணாத காவியம் !!!
இயற்கை தீட்டிய
ஆழகு ஓவியம் ..,
அதிகாலை வெண்பனியில்
"மதி"பெருகி
அலை மகளாய்
மலை முகட்டை அணைக்கிறாள்
"அருவி "- யாய்
இரவுக்காட்சியில்
நிசப்தத்தின் இறைச்சல்மேல்
நித்திரை கொள்கிறேன் !!!
இறைவனின் படைப்பில்
இத்தனை அழகா !!!
இல்லை
இல்லவே இல்லை !!!
நட்பின் கருவறையில்
கைகோர்க்கும் போது
காணும் அத்தனையும்
"ஆழகு" தான் ..,
மீண்டும் நாங்கள்
"குழந்தைகளாய்"

 - லோகநாதன் 




இயற்கையில் ஓர் இனிய பயணம்


அலுவலக உலகத்தை
சற்று மறந்துவிட்டு
இயற்கை அன்னையின்
மடியில்
துயில் கொள்ள
சென்றோம்,
ஒரே குடும்பமாய் !
விருந்தோம்பல்
பண்பினை
எங்கே கற்று கொண்டன . இந்த செடிகள் ?
எல்லா செடிகளும்
தலை பணிந்து
இலைகளை அசைத்து
சிறு புன்னகையுடன் 

வரவேற்க !
வரவேற்பாளர்களாய் ,
வழி நெடுக
வானுயர்ந்த  மரங்கள் !
தாயின் தாலாட்டாய்
பறவைகளின் இனிய
சப்தம்
எல்லா திசைகளிலும் !
தென்றல் காற்று ,
தேகம் தழுவ
சுவாச அறை வரை
சென்று திரும்பியது ;
தூய்மையான புத்துணர்வுட்டும் ஆக்ஸிஜன் !
உலகிற்கு ஒளி தரும்
கதிரவனுக்கே கடுங்குளிரோ ?
மேக மெத்தைக்குள்
பனி போர்வைக்குள்
அப்படியோர் உறக்கம் !
மனதிற்கு  மகிழ்வாய் ,
கண்ணிற்கு குளிர்ச்சியாய்,
திரும்பும் திசையெங்கும்
வண்ண மலர்கள் !
மலர்களை தேடி ,
வண்ணத்துப் பூச்சிகளின் ஊர்வலம்!
நிலவு மகளுக்கோ
புது  விருந்தாளிகளான
நம்மை கண்ட
ஆனந்தமோ ?
இரவு முழுவதும் ,
பனி மழை பொழிய
கடுங்குளிரிலும் நெருப்பு மூட்டி ,
இதமான வெப்பத்துடன்
ஆட்டம் பாட்டமாய்
களிப்புடன் நிறைவடைந்தது
அன்றைய இரவு !
பலவித விளையாட்டுகளுடன்
மழலைகளாய் மாறினோமே!
இறுதியாய்,
மலைகளின் ராணியிடமிருந்து 
பிரியா விடை பெற்று கொண்டு
இரு நாட்களின் இனிய நினைவுகளை ,
இதய ஆல்பத்தில் அழியா புகைப்படமாய் பதித்து கொண்டு
மீண்டும் திரும்பினோம் ,
எங்கள்
இயல்பு வாழ்விற்கு !



 - பானு

Friday, December 9, 2011

கனவு !



எதிர்காலம்..,
நிகழ்காலம் நிஜமானவர்களின்
ஏழாம் அறிவின்  எழுச்சி!!!

" அ...ஆ.. இ.."
பாடம் படிக்கிறேன்... நான் !!!!
கண்களில் ஏக்கம்
கனவுகளின் துரத்தல்
சலனமில்லா ஒரு இரைச்சல்
கையில் உலகம்
உணர்வுகளின் நெருக்கடி  
வாழ்க்கையின் எழுதுகோல்
இசையின்   அரவணைப்பு
சுவாசத்திலும் சுகம்
தாயின் முதல் முத்தம்
தவிப்புகளின் தாரக மந்திரம்
......................................,
" தம்பி  சீக்கிரம் கிளம்பு
வேலைக்கு time  ஆயிடுச்சு "ஆச்சர்யத்தில் கண் விழித்தேன்
அம்மாவின் அழகிய அறிவிப்பு !!!
கண்களின் பிம்பத்தில் 
(என்) ஓலைக்குடிசையின் உயிரோட்டம்....

ஆம்..........
"கல்வி"
எனக்கு ஓர் பகல் கனவு ....
எட்டாத ஓர் உணர்வு....

இருளின் நாடகத்தில்
நினைவுகளும் கவிஞனாக்கிவிட்டது
"கல்வி" எனும் எழுதுகோல் கையில் ...,

" இதோ வந்துட்டேன் அம்மா !!!"
அனிச்சைசெயலாய் அத்தனையும்..,

இரவுகளுக்காக காத்திருக்கிறேன்
இன்று
அடுத்த பக்கத்தில் "அப்துல் கலாம்"..,

கானல் நீராய் என் "கல்வி"
மூளையின் முதுகெலும்பில்
முளைத்திட்ட ஓர் விதை !!!

என்ன செய்ய
படிக்கும் வயதில்
நான்
பால் வியாபாரி !!!
நடக்கிறேன்
வழக்கமான பயணம்

கனக்கிறது..,
கையில் ஏற்றிய பாரமல்ல
நினைவுக்கூட்டில்
என் கனவுப் புத்தகங்கள் !!!

"வருகிறேன் அம்மா"
வாடகை இல்லாதது
கரு(அ)வறை மட்டும்தானோ !!!
ஆழ்ந்த யோசனையில்
இன்றைய நாள்...

கை கொடுக்க வேண்டாம்
'கல்வி' கொடுங்கள் ...,
சாலையில் சந்தித்த மக்களிடம்
என் மனம் கேட்ட யாசகம் !!!

நிஜமாக்குமா !!! நிஜமாகுமா !!!
என்  "கனவு"


" அம்மா பால் ............................... "

- லோகநாதன்


 மரங்கள் நிறைந்த காடு !
மழைக்குபஞ்சமில்லா ஞாலம் !
மனித நேயமுள்ள மனம் !
சிசுக்கொலை இல்லா கிராமம்!
மதுபானக் கடை இல்லா தெருக்கள் !
குழந்தை தொழிலாளர் இல்ல சமூகம்!
விபத்தில்லா சாலைகள் !
வீதியெங்கும் மரங்கள் !
குப்பையில்லா வீதிகள் !
அனைவருக்கும் கல்வி !
சாதிகள் இல்லா சமூகம் !
யாசகர்கள் இல்லா கோயில்கள் !
புகையில்லா வாகனம் !
தூய்மையான காற்று !
வன்முறை இல்லா உலகம் !
லஞ்சமில்லா வாழ்கை !
அனாதைகளே இல்லா அகிலம் !
கடனில்லா இந்தியா!
சிட்டுக்  குருவிகளின் சப்தம் !
இவை எல்லாம் ,
        இனி  கனவில் மட்டும் தானா ?
         நிஜமாகுமா ?
         மாற்றம் தேடியே ,
                                         ஓர்  பயணம் !!!

- பானு