"அன்பாய் நீ!
ஆதரவாய் அப்பா!
இறைவனின் ஆசியுடன்
இன்பமான வாழ்வு!"
உன் கருவறையில்
நான் கண்ட அழகிய கனா!!
ஆனால் அது கனவாக
மட்டுமே
இருந்துவிடும்
என்பதறியாது
வந்தேனம்மா இந்த
உலகிற்கு!
தாய்ப்பால் இல்லாமல்
புட்டிப்பால் கொடுத்ததாக
பாட்டி சொன்னாங்க,
கள்ளிப்பால் கொடுத்திருக்கலாமோ?
என்று கன்னி மனம்
நினைத்ததம்மா!
ஆராரோ கேட்டதில்லை,
பகிர்ந்து கொள்ள
பந்தமில்லை,
சோறு ஊட்ட ஆளுமில்லை,
அன்னை மடி உறங்கவில்லை!
சோர்வுற்ற வேளைகளிலும்,
சோகம் எனை சூழ்கையிலும்,
என் தலை சாய,உன் தோள்களும்
விழி நீர் துடைக்க,உன் விரல்களும்
இங்கு இல்லையம்மா!
பட்டம் படித்து,பரிசு பல வாங்கையிலே
"என் மகள்" என்று
கண்ணில் நீர் மல்க,
எனை கட்டி அணைத்து
,உச்சி நுகர
நீ இங்கு இல்லை
அம்மா!
சொல்ல வந்த வேதனைகளும்,
தேக்கி வைத்த துன்பங்களும்
,
தொண்டை குழியில்
உருளுதம்மா!
துன்பப்பட்டு,துன்பப்பட்டு,
துயரங்கள் கூட
துவண்டுவிட்டன!
விழி நீர் ஒவ்வொன்றும்,
வைரங்களாகும் வரம்
மட்டும் எனக்கு கிடைத்திருந்தால்,
உன் மகளும் இருந்திருப்பாள்
அம்மா
உலக செல்வந்தர்களில்
ஒருவராய்!
நீ இல்லாது
கடந்து வந்த என்
வாழ்க்கை பயணம்,
எனக்கு கற்று தந்தவை,
வலிகளையும்,வேதனைகளையும் மட்டுமல்ல
கொஞ்சம் வலி தாங்கும்
சக்தியையும்,
தேயும் நிலவிடம்
,"வருந்தாதே! வளர்பிறை வரும்" என்றும்
காயும் நிலத்திடம், "கலங்காதே!கார்மேகம் கண்
திறக்கும்" என்றும்
ஆறுதல் சொல்லும்
வலிமையையும் தான் அம்மா!
சாமிகிட்ட நீ போக,
சித்தியுடன் அப்பா
போக,
அழுவதை தவிர அப்பருவத்தில், வேறேதும் அறியா
மங்கையிவள் என் செய்வாளம்மா?
நான் இழந்த அத்தனையையும்,
மொத்தமாக திருப்பி
தர,
பாவி மனம் ஏங்குதம்மா..
"என் மகளாய் நீ
பிறப்பாய்" எனும் கலையாத கனவோடு!!!!
-பானு